இந்தியாவில் உள்ள வங்கிகளில் மொத்தம் ரூ.110 லட்சம் கோடி டெபாசிட்டாக உள்ளது. இத்தொகை சாதாரண மக்களின் பணம். இவை பாதுகாக்கப்பட வேண்டுமானால் வங்கிகள் தனியார்மயமாக்கப்பட கூடாது.
ஆனால் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்த முயற்சி எடுத்து வருவது கண்டனத்திற்குரியது. விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்க வேண்டும்.
சாதாரண மக்கள் வங்கிகளில் சேமித்துள்ள தொகைகளுக்கு பாதுகாப்பு வேண்டும். ஆனால் அரசு மேல்குடி மக்களுக்கு தாராளமான கடன் வழங்கியும், அவர்களின் வாராக்கடன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு அரணாக உள்ளது.
அவர்களை பாதுகாக்கவே மத்திய அரசு விரும்புகிறது. சாதாரண மக்களின் சேமிப்பு தொகைக்கு தற்போது அரை சதவீதம் வட்டியை குறைத்துள்ள அரசு ஏன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியில் அரை சதவீதம் உயர்த்த கூடாது என்று தஞ்சையில் தகவல்களை தந்து கேள்விகளை அடுக்கினர், இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அருணாச்சலம்.
மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது " ஐடிபிஐ வங்கி ரூ. 5 லட்சம் கோடி வாராக்கடனை காரணம் காட்டி அதன் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய போக்குகளை கண்டித்து வரும் 27ம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறும் வங்கி ஊழியர் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்" என்று கூறிஉள்ளார்...