தான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்று மணல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். டைரி என்று வெளியாகி உள்ள காகிதத்தில் இருப்பது தம் கையெழுத்து அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Special Correspondent

கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனையின் போது சேகர் ரெட்டி வீட்டில் டைரி சிக்கியது. அமைச்சர்களுக்கு மாதா மாதம் லஞ்சம் கொடுத்தது சேகர் ரெட்டி டைரி மூலம் அம்பலமானது. இந்நிலையில் டைரி என்று வெளியாகி உள்ள காகிதத்தில் இருப்பது தம் கையெழுத்து அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிய அளவில் இருந்து படிபடியாக முன்னேறி உள்ளேன் என்று அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். அதிமுகவில் நீண்ட காலமாக தாம் இருப்பதாகவும் சேகர் ரெட்டி கூறினார்.

மணல் குவாரி கான்ட்ராக்ட் எதையும் தமது எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனம் எடுக்கவில்லை என்று சேகர் ரெட்டி கூறியுள்ளார். தமது 500 வாகனங்களை மணல் ஏற்ற வாடகைக்கே விடுகிறோம் என்று சேகர் ரெட்டி கூறியுள்ளார்.

500 வாகனங்களை வாடகைக்கு விடுவதால் ரூ.60 லட்சம் வருமானம் கிடைக்கிறது என்றும் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார். ரூ.30 கோடியும், 500 வாகனங்களை வாடகை விட்டதால் கிடைத்தது என்று அவர் கூறியுள்ளார்.

தங்களது வர்த்தகம் மொத்தமுமே ரொக்கமாகவே நடைபெறுகிறது. மணல் குவாரிக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சேகர் ரெட்டி கூறியுள்ளார். வருமான முன்வரி ரூ.60 கோடி செலுத்தியுள்ளதாக சேகர் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் 2 முறை மட்டுமே அவரை பார்த்துள்ளேன் என்று சன் நீயூஸ் தொலைக்காட்சிக்கு நேர்காணல் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் யாருக்கும் எந்த பணமும் தரவில்லை என்று சேகர் ரெட்டி கூறியுள்ளார். தமக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை என்று சேகர் ரெட்டி பேட்டியில் கூறியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு சேகர் ரெட்டி பேட்டியளிப்பது இதுவே முதல் முறையாகும்.

தாம் விசாரணைக்கு அஞ்சவில்லை என்றும் இப்போது கூட விசாரணைக்கு தயார் என்று சேகர் ரெட்டி தெரிவித்தார்.

இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் " டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் மட்டுமல்ல, வீக் இதழிலும் சேகர் ரெட்டியின் டைரியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் செய்தி வெளியாகி இருக்கிறது என்று கூறிய அவர் மேலும் தொடக்கத்தில் இருந்தே மணல் மாஃபியா சேகர் ரெட்டி கும்பலுடன் ஓ.பன்னீர்செல்வம் எந்தளவுக்கு தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை பலமுறை சுட்டிக்காட்டி உள்ளதாகவும், மணல் மாஃபியா சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தபோது பறிமுதல் செய்யப்பட்ட டைரியில் ஓபிஎஸ் மற்றும் குட்கா புகழ் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 8 அமைச்சர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட ஆதாரங்களோடு தெரிய வந்தது என்றும்., இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் என்றும் திமுக கோரியுள்ளது என்றும் தெரிவித்தார்".