மத ஒடுக்குமுறையால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதிகேட்டு, கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எழும்பூரில் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி வேலூரில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணங்களை வீடியோ காட்சியாகவும், கடிதமாகவும் பதிவு செய்திருந்தார். சுடுமண் துறையில் இறுதியாண்டு படித்துவந்த பிரகாஷ், தன்னை துறைத்தலைவர் ரவிக்குமார் மற்றும் பேராசிரியர் சிவராஜ் ஆகியோர் மத ரீதியிலான பாகுபாடு காட்டுவதாகவும், பாடங்களை சரிவர நடத்துவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதனைப் பற்றி முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத கல்லூரி முதல்வர் மதியழகன் பற்றியும் கூறியிருந்தார்.
பிரகாஷ் மரணித்த நாள் முதல் அரசு கவின்கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றநிலையில், உயிரிழந்த மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதிகேட்டு கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்மந்தப்பட்ட துறைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் மற்றும் கல்லூரி தலைவர் உறுதியளித்ததை அடுத்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
ஆனால், வாக்குறுதி அளித்ததைப் போல் சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது இரண்டு மாதங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், இன்று கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.