டைலர் மற்றும் கேமரூன் விங்க்லெவோஸ் இரட்டையர்கள் கேமரா முன்பு தோன்றவில்லை என்றாலும், ஒரு படத்தின் மூலம் பிரபலமடைந்தார்கள்.
ஃபேஸ்புக்கிற்காக தங்களது ஐடியவை திருடியதாகக் கூறி, மார்க் சக்கர்பெர்க்கிற்கு எதிராக இந்த அமெரிக்க இரட்டையர்கள் வழக்கு தொடர முடிவு செய்த பிறகு, இவர்களின் கதையை மையமாக வைத்து 'தி சோஷியல் நெட்வோர்க்' எனும் படம் 2010-ல் வெளியானது.
நீதிமன்றத்தின் மூலம் 2011-ம் ஆண்டு இவர்கள் 65 மில்லியன் டாலர் பணத்தை இழப்பீடாகப் பெற்றனர். இரண்டு வருடங்கள் கழித்து, இழப்பீடாகப் பெற்ற பணத்தின் பெரும்பகுதியை(11 மில்லியன் டாலர்) பிட்காயின் வாங்கப் பயன்படுத்தினர்.
பிட்காயினானது இணையம் சார்ந்த மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகையைச் சார்ந்தது. இது உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ளது. டைலர் மற்றும் கேமரூன் விங்கிலோவ்ஸ் இவர்கள் முதலீடு செய்த பிட்காயின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து, இவர்களை உலகின் முதல் கிரிப்டோகரன்சி கோடீஸ்வரர்களாக உயர்த்தியது. இவர்களின் பிட்காயினின் மதிப்பு தற்போது ஒரு பில்லியன் டாலர்களாகும்.
இந்த இரட்டையர்கள் முன்பே பிட்காயின் ஆர்வலர்களாக இருந்துள்ளனர். 2013-ம் ஆண்டு இவர்கள் 90,000 பிட்கயின்களை வாங்கினர். அந்த ஆண்டு புழக்கத்தில் இருந்த பிட்காயின்களின் எண்ணிக்கையில், இவர்கள் வாங்கியது ஒரு சதவீதமாகும்.
வாங்கியதில் ஒரு பிட்காயினைக்கூட விற்கவில்லை என இவர்கள் கூறுகிறார்கள். பிட்காயினின் அளவானது ப்ளாக்செயின் எனும் மென்பொருளால் கண்டிப்புடன் கட்டுப்படுத்தப்படுகிறது.
'' நாங்கள் ஸ்பெயினில் விடுமுறையில் இருந்தபோது, பிட்காயின்களை பற்றி ஒரு நபர் பேச தொடங்கினார். அந்தப் பேச்சால் கவரப்பட்டோம்'' என இந்த இரட்டையர்கள் நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
இவர்கள் தங்களுக்கான பிட்காயின்களை வாங்கியபோது, ஒரு காயினின் மதிப்பு 20 டாலர்களாக இருந்தது. ஹார்வார்டில் பொருளாதாரப் பட்டம் பெற்ற இவர்கள், பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் படகோட்டுதல் விளையாட்டில் அமெரிக்கா சார்பில் விளையாடினர். அத்துடன் விங்கிலோவ்ஸ் கேபிட்டல் என்ற தங்களது முதலீட்டு நிதி நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.
பிட்காயின் மீது வலுவான நம்பிக்கை வைத்திருக்கும் இவர்கள், இந்த வருடத் தொடக்கத்தில் அமெரிக்க பங்குச் சந்தையில் அதை பரிவர்த்தனை செய்யவேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், இவர்களின் திட்டம் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால், பிட்காயினின் மதிப்பில் தற்காலிக சரிவு ஏற்பட்டது. பிட்காயின் முதலீட்டின் அபாயங்கள் பற்றி முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். கட்டுப்பாடு இல்லாதது மற்றும் அதன் மையப்படுத்தப்படாத தன்மையால் எதிர்பாராத நேரத்தில் பெரும் சரிவு ஏற்படலாம் என அவர்கள் வாதிடுகின்றனர்.
இருந்தாலும் இந்த இரட்டையர்கள் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளவில்லை.