கன்னியாகுமரி சின்னத்துறையில் ரயில் மறியல் போராட்டத்தில் பேரணி மேற்கொண்ட 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை மீட்பதில் மெத்தனம் காட்டுவதாக குற்றசாட்டியுள்ளனர் ..
முன்னதாக எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின், காணாமல் போன மீனவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்ற போது அவரிடம் மீனவ குடும்பங்கள் அழுதவாறே கதறியது பார்ப்போர் கண்ணில் கண்ணீர் வர வைத்தது .
அதிமுக அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா அங்கு வந்த போது மீனவ குடும்பங்கள் அவர்களை எதிர்த்து முழக்கம் இட்டது அரசு அதிகாரிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில்...
ஒக்கி புயல் பாதிப்பால் அண்டை மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ள மீனவர்களை தமிழகம் அழைத்து வருவது தொடர்பாக கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தியபின் வெளியிட்ட அறிவிப்புவின் விவரம் :
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவர்களில் சிலர் இன்னமும் கரை திரும்பவில்லை என மாவட்ட நிர்வாகம் செய்து வரும் கணக்கெடுப்பின் போது மீனவர்களின் உறவினர்கள் வழியாகத் தெரிய வந்துள்ளது. இந்த மீனவர்கள் கர்நாடக மாநிலத்தின் மங்களூருக்கு அருகிலுள்ள மாரிகோ தீவிலும், குஜராத், லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையேவுள்ள ஆழ்கடல் பகுதியிலும் இருக்கலாம் என மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கான தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியை கடலோரக் காவல் படை, இந்திய விமானப் படை, இந்திய கடற்படையும் கூட்டாக இணைந்து அரபிக்கடல் பகுதியில், அனைத்து மீனவர்களும் மீட்கப்படும் வரையில் தீவிர மற்றும் தொடர் தேடுதல் மேற்கொள்ள வேண்டுமென என்றும்,
அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்கள் பத்திரமாக தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏதுவாக விசைப்படகு ஒன்றுக்கு 750 லிட்டர் டீசலும், நாட்டுப்படகுக்கு 200 லிட்டர் டீசலும், உணவுப் பொருள்கள் வாங்குவதற்காக படகிலுள்ள மீனவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும் சிறப்பு நிகழ்வாக வழங்கப்படும் என்றும்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ்பாபு, கர்நாடக மாநிலத்துக்கும், மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஷம்பு கல்லோலிகர், குஜராத் மாநிலத்துக்கு சந்திரகாந்த் பி.காம்ளே, கேரள மாநிலத்துக்கு அருண் ராய், லட்சத்தீவு யூனியன் பிரதேசத்துக்கு ஜான் லூயிஸ் ஆகியோர் அனுப்பி வைக்கப்படுவர் என்றும் ., எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.