குமரி மாவட்டத்தில் ஓகி புயலின் தாக்குதலால் மலையோர கிராமங்கள் மற்றும் அதை சார்ந்த விவசாய பயிர்கள் பெரும் சேதம் அடைந்தன. ஓகி புயலின் தாக்குதல் முடிந்து 1 வாரம் ஆகியும் இன்னும் மீட்பு குழுவினர் அந்த பகுதிக்கு செல்ல வில்லை.
வனத்துறை மற்றும் அரசு ரப்பர் தோட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தனியார் ரப்பர் தோட்டங்களும், எஸ்டேட்டுகளிலும் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் குமரி எஸ்டேட்டுகளில் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு வாரமாக வெளியே வர முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள்.
கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், காளிகேசம், மாறாமலை உள்ளிட்ட பகுதிகளில் ரப்பர் மரங்கள், விலை உயர்ந்த தேக்கு மரங்கள், ஈட்டி, அயனி உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்து கிடக்கின்றன.
வனப்பகுதிகளிலும் ஏராளமான உயர் ரக மரங்கள் முறிந்து உள்ளன. இந்த மரங்களை அகற்ற முடியாமல் வனத்துறை திணறி வருகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் எஸ்டேட்டுகளில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு ரப்பர் மட்டுமின்றி கிராம்பு, முந்திரி உள்ளிட்டவையும் பயிர் செய்யப்படுகின்றன.
வட மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஏராளமானவர்கள் தங்கி இருந்து வேலை பார்க்கிறார்கள். இவர்கள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மலையில் இருந்து இறங்கி, 1 வாரத்துக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வது வழக்கம்.
ஆனால் கடந்த 29ம் தேதி நள்ளிரவில் வீசிய ஓகி புயலால், மலையோரங்களில் உள்ள பாதைகள் அடியோடு துண்டிக்கப்பட்டன. நடந்து கூட வர முடியாத அளவுக்கு மரங்களும், மின் கம்பங்களும், டிரான்ஸ்பார்மர்களும் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.
கீரிப்பாறை அடுத்த மாறாமலையில் உள்ள எஸ்டேட்டு களில் சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்து, உணவு பொருட்களை வாங்கிக் கொண்டு மலை பகுதிக்கு செல்வார்கள். கீரிப்பாறை சப்பாத்து பாலத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரம் உள்ள மாறாமலை ரோட்டில் மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து கிடக்கின்றன.
இதனால் மலையோர கிராமத்தில் இருந்த மக்கள் இறங்கி வர முடியாமல் தவிக்கிறார்கள். வழக்கமாக 1 வாரத்துக்கான உணவு பொருட்களை மட்டுமே இவர்கள் இருப்பில் வைத்து இருப்பார்கள். தற்போது புயல் தாக்கி 1 வாரம் நிறைவடைந்த நிலையில், இவர்கள் உணவு சமைக்க என்ன செய்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த வித தகவல் தொடர்பும் இல்லாததால் இவர்களின் கதி என்ன? என்பதும் தெரிய வில்லை. மாறாமலைக்கான 20 கி.மீ. சாலையில் நேற்று மாலை வரை சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு தான் மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து ஜே.சி.பி. மூலம் மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது. பழமையான ராட்சத மரங்கள் முறிந்து கிடப்பதால், இவற்றை அப்புறப்படுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தொழிலாளர்களின் நிலையை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை ஹெலிகாப்டர் மூலம் வினியோகிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.