மருத்துவ சீட் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை திசைத்திருப்புவதற்காக எஸ்.ஆர்.எம்.பச்சமுத்து தனக்கு எதிராக அவதூறு பரப்பி வருவதாக வேந்தர் மூவிஸ் மதன் போலீஸ் புகார் அளித்துள்ளார்.

Special Correspondent

சென்னையில் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனை சந்தித்து அவர் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதன் மருத்துவ சீட் விவகாரத்தில் பெற்றோர்களுக்கு திருப்பி வழங்கப்பட்ட 88 கோடி ரூபாயும் பச்சமுத்துடையது தான் என்று கூறியுள்ளார்.

அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக அந்த பணத்தை தன்னிடம் வசூலித்துவிட்டதாக பச்சமுத்து அவதூறு பரப்புகிறார் என்பது மதனின் புகாராகும்.

மருத்துவ சீட் வழங்க பெற்றோர்களிடம் 88 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தனர் என்பது பச்சமுத்து மற்றும் மதன் மீதான புகார். இதற்காக கைது செய்யப்பட்ட இருவரும் பின்னர் ஜாமீனில் விடுக்கப்பட்டனர். பணத்தை பெற்றோருக்கு திருப்பி வழங்கியதையடுத்து வழக்கில் இருந்து பச்சமுத்து விடுவிக்கப்பட்டார்.

ஆனாலும் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் பச்சமுத்துவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தன்னை குற்றமற்றவர் என்பது போல காட்டிக்கொள்ள பச்சமுத்து முயற்சிக்கிறார் என்று மதன் குற்றம்சாட்டியுள்ளார்.

பச்சமுத்து மீடியா துறையில் பிரபலமாக இயங்கி வரும் புதியதலைமுறை டிவி மற்றும் இதழ்களை நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.