ஆஸ்திரேலியாவில் ஓரினசேர்க்கை பாலின திருமணம் தொடர்பான மசோதாவை செனட்டில் நிறைவேற்றிய ஐந்து நாட்களுக்கு பின் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக திங்களன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எம் பி ஒருவர் அவரது காதலரிடம் தன் காதலை வெளிப்படுத்தினார்.

Special Correspondent

பொது கேலரியில் அமர்ந்திருந்த ரியான் பொலுஜரிடம், நாடாளுமன்ற உறுப்பினரான டிம் வில்சன் தன் காதலை வெளிப்படுத்த, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அவர்கள் அளித்துக் கொண்ட உறுதிமொழியின்படி, டிம்மின் காதலை ஒப்புக்கொண்டார் ரியான்.

"நான் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ரியான், என்னைத் திருமணம் செய்துக் கொள்ள சம்மதமா?" என்று டிம் கேட்டார். டிம் கேட்ட இக்கேள்வி, கூட்டத்தில் அமர்ந்தவர்களினிடையே உற்சாகத்தையும் கைத்தட்டல்களையும் எழுப்பியது. இருவரையும் வாழ்த்திய சபாநாயகர், பொலுஜரின் சம்மதத்தை அதிகாரப்பூர்வமாக பாராளுமன்ற விவாத பதிவேட்டில் பதிவேற்றினார்.

ஓரினசேர்க்கை பாலின திருமணம் குறித்து நடைபெற்ற தேசிய விவாதம் தங்களின் உறவிற்கு உற்சாகத்தை அளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டிம் வில்சன் தெரிவித்தார்.

முன்னதாக, ஓரின சேர்க்கை இளைஞராக வளர்ந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட அவர், அதை சுற்றியுள்ள களங்கத்தால் ஏற்பட்ட போராட்டத்தை குறித்தும் பேசினார்.

கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில், ஓரினசேர்க்கை பாலின திருமணங்களை சட்டப்பூர்வமானதாக்குவதற்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் மக்கள் வாக்களித்திருந்தனர்.

நாடாளுமன்ற அமர்வுகளில் காதலை வெளிப்படுத்திய முதல் எம்.பி இவர்தான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.