தென்தமிழகக் கடலோரப் பகுதிகளை அச்சுறுத்திவந்த ஒகி புயல், தற்போது லட்சத் தீவுகளை நோக்கி நகர்ந்துள்ளதால் தமிழகத்தில் மழை குறைந்துள்ளது.

Special Correspondent

இதற்கிடையில் அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சுசீந்திரம் பகுதியில் பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் மூழ்கியது. மேலும் இந்தப் பகுதியில் பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இங்கு வசித்தவர்களை தீயணைப்புத் துறையினரும் பேரிடர் மீட்புப் படையினரும் மீட்டு, நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.மேலும் புகழ்பெற்ற தாணுமாலயன் சுவாமி கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இந்த மழையால் சுமார் 3,750க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழுந்துவிட்டதால் மின்சாரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் துண்டிக்கப்பட்டிருக்கிறது. 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் உட்பட ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.

11 துணை மின் நிலையங்களும் 25க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளும் சேதமடைந்திருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார். திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் சாலைகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், ஆரல்வாய் மொழியைத் தாண்டி பேருந்துகள் செல்ல முடியவில்லை.

இந்த மழையின் காரணமாக கன்னியாகுமரியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது குடும்பங்களுக்கு மாநில அரசு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளது.

தமிழக, கேரளக் கடற்பகுதியில் மீனவர்கள் தவித்துவந்ததால் அவர்களை மீட்பதற்கு பத்து கப்பல்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக இந்தியக் கடலோரக் காவல்படை தெரிவித்திருக்கிறது.

கேரளக் கடற்பகுதியில் இருந்து 26 படகுகளில் கடலுக்குச் சென்ற 113 மீனவர்கள், கடலில் தவித்துவருவதாக செய்திகள் வெளியான நிலையில், 71 மீனவர்களும் 12 படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. மீதமிருப்பவர்கள் தேடப்பட்டுவருகின்றனர்.

கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக பாபநாசத்தில் 45 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாற்றில் 38 சென்டி மீட்டர் மழையும் நாகர்கோவில் கொடைக்கானல் ஆகிய இடங்களில் 13 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழையானது அக்டோபர் 1 முதல் நவம்பர் 27 வரையிலான காலகட்டத்தில் இயல்படைவிட 18 சதவீதம் குறைவாகப் பெய்திருந்தது. ஆனால், இந்த ஒக்கி புயலின் காரணமாக, இயல்பைவிட 4 சதவீதம் மட்டுமே மழையளவு குறைவாக உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்யுமென்றும் கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல்லில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடுமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழையால் முல்லைப் பெரியாறு, வைகை அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பெரியாறு அணைக்கு சுமார் 16,000 கன அடியும் வைகை அணைக்கு 2,500 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.