குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியிடம், ராணுவத்தில் உயிரிழந்த தியாகி அசோக் தட்வியின் மகள் ரூபல் தட்வி நேரில் மனு அளிக்க வந்துள்ளார். ஆனால் அவரை அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் தரதரவென வெளியே இழுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கூறும் ரூபல் தட்வி, தனது தந்தை கடந்த 2002ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் உயிரிழந்துவிட்டதாகவும், ஆனால் தங்களுக்கு வரவேண்டிய இழப்பீடு மற்றும் மாதந்திர நிதி வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக குஜராத் வந்த பிரதமர் மோடியை தான் சந்திக்க சென்றதாகவும், ஆனால் தனக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாநில அமைச்சர்களை சந்தித்து மனு கொடுக்க சென்றாலும், அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் உயிரிழந்த தியாகியின் மகளை, காவலர்கள் இழுத்துச் செல்லும் வீடியோவை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சரை சந்திக்க சென்ற ரூபலை காவலர்கள் இழுத்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோ காட்சியை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, இது பாஜக பெருமிதத்தின் உச்சம் என்று விமர்சித்துள்ளார். அத்துடன் தன்னை மிகவும் தேசப்பற்று உடையவர் என்று கூறும் குஜராத் முதலமைச்சர் ரூபானி, தியாகி மகளுக்கு செய்துள்ள செயல் மனிதநேயத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றும் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
பல வாக்குறுதிகளை கொடுத்துள்ள ரூபானி 15 வயதுள்ள அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. மனிதநேயத்திற்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்கு நீதி வேண்டும் என்றும் ராகுல் கூறியுள்ளார்.