பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரியும் ரகுபதியின் இறப்புக்கு டிப்பர் லாரி மட்டும்தான் காரணமா என்றால் நிச்சயமாக இல்லை என்கிறார் விபத்தில் பலியான ரகுபதியின் மாமா லோகநாதன்.

Special Correspondent

"ஒவ்வொரு முறை இந்தியாவுக்கு வரும்போதும் ரகு பழனி கோவிலுக்கு செல்வது வழக்கம். இம்முறை அமெரிக்கா கிளம்ப இரண்டு நாட்கள் இருந்த நிலையில், பழனி மலைக்கு அதிகாலை நேரத்தில் கிளம்பினார். அவிநாசி நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் பைக் மோதி கீழே விழுந்தபின் அவர் தலை மீது லாரி ஏறியுள்ளது.

ரகு நேருக்கு நேர் லாரி மீது மோதியிருந்தால் வண்டிக்கும் அல்லவா சேதமாகியிருக்கும். ஆனால், வலப்பக்கம் இண்டிகேட்டரை தவிர்த்து வேறெந்த சேதமும் வண்டிக்கு ஏற்படவில்லை. ரகுவுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தோம். ஆனால், ரகுவின் மரணம் குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது'' என்றார் லோகநாதன் தழுதழுக்கும் குரலில்.

விபத்து நடந்த சிலமணி நேரங்களில், விபத்திற்கு முக்கிய காரணமாக இருந்த அவிநாசி - கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் அ.தி.மு.கவினர் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அலங்கார வளைவுக்கான கம்புகள் நடப்பட்ட இடத்தில் ரகுவை கொன்றது யார்? என்று ஆங்கிலத்தில் கேள்வியேழுப்பி வெள்ளை பெயிண்டால் வரையப்பட்டிருந்தது. இந்த புகைப்படமும், விபத்து குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதையடுத்து விஸ்வரூபம் எடுத்தது.

இந்த வழக்கில் கவனக்குறைவாக வண்டி ஓட்டியதாக டிப்பர் லாரி ஓட்டுநர் மோகன் மீது காவல்துறையினர் 304A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதை குறிப்பிட்டுள்ள சட்ட வல்லுனர்கள், பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீதும் இதே பிரிவை பயன்படுத்தி வழக்குப் போட முடியும் என்கிறார்கள்.

விபத்து நடைபெற்ற அவிநாசி - கோவை நெடுஞ்சாலையில் எழுதப்பட்டிருந்த Who Killed Ragu? என்ற வாசகம் தற்போது முழுவதும் பெயிண்ட் ஊற்றப்பட்டு அதன் மீது தார் ஊற்றப்பட்டு முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அழிக்கப்பட்ட வாசகத்தின் புகைப்படமும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கும் அனைவரும் தமிழக அரசையே சாடி கேலி மீம்மகளை இணையவாசிகள் வெளியிட்டு வருகின்றனர்.

Special Correspondent

ரகுபதி மரணத்தையடுத்து கோவை சிங்காநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தொடப்பட்டுள்ளது. அதில், கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி ரகுபதி என்ற மென் பொறியாளர் மரணமடைந்துவிட்ட நிலையில், விதிமுறைகளை பின்பற்றாத நகராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், ரகுபதியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரியும், மேலும், இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறிவிட்டது.

மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரனை தொடர்பு கொண்டபோது, இந்த பிரச்சனை குறித்து மாநகராட்சியுடன்தான் பேச வேண்டும் என்றும், இதற்கும் ஆட்சியருக்கும் தொடர்பில்லை என்றும் அவரது உதவியாளர் கூறினார்.பேனர், கட்-அவுட் போன்ற விளம்பரங்களை வைப்பதற்கு உரிமம் வழங்கும் அதிகாரி மாவட்ட ஆட்சியர்தானே என்று நாம் மீண்டும் கேள்வியெழுப்பிய போது, மேற்கொண்டு பேச விரும்பாமல் நம்முடைய தொடர்பை துண்டித்தார் அவரது உதவியாளர்.

ரகுபதியின் மரணம் குறித்து அரசு தரப்பு விளக்கம் பெறுவதற்காக கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயனை தொடர்பு கொண்டோம் ஆனால் நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.

ரகுவின் மரணத்திற்கு பேனர் காரணமல்ல என்று தமிழக முதல்வர் எடப்பாடி கூறியதும் குறிப்பிடத்தக்கது

Input : Syndicate feeds BBC