2012ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் தன் பேச்சைத் துவக்கும்போது, "1989ல் சேவல் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் நிற்கவைத்து என் அரசியல் வாழ்க்கையில் கோடு போட்டது நீங்கள்தான்; நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராக்கி, என்னை ரோடு போடச் சொன்னதும் நீங்கள்தான்" என்று ஆரம்பித்தார். அப்போது அவையிலிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா பழனிச்சாமியின் இந்த துவக்கத்தை வெகுவாகப் பாராட்டினார்.

Special Correspondent

ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சரான நிலையில், அவரது உரையில் பல தவறுதலான தகவல்கள் இடம்பெறுவது பெரும் கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா புதன்கிழமையன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. அங்கு பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தஞ்சாவூரில் பெருமைகளைப் பற்றிப் பேசும்போது "கம்பராமாயணம் தந்த சேக்கிழார்" உள்ளிட்டவர்களைத் தந்த மாவட்டம் என்று குறிப்பிட்டார். மேலும் பொருளாதார மேதையும் காந்தியவாதியுமான ஜே.சி. குமரப்பாவை மகாத்மா காந்தியின் உதவியாளர் என்று குறிப்பிட்டார்.

அவரது இந்தப் பேச்சு உடனடியாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்குள்ளானது. அவரது உரை ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்போதும், அதே தவறுடன் அனுப்பப்பட்டது.

ஆனால், முதலமைச்சரின் உரையில் தவறான தகவல்கள் இடம்பெறுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர், சாயல்குடிக்கு அருகில் குண்டாற்றில் தடுப்பணை கட்டப்படும் என்பது. சாயல் குடியிலிருந்து 8 கி.மீ. தள்ளி ஓடும் நதியில் தடுப்பணை கட்டுவதாக அறிவித்தது ஊடகங்களில் விமர்சனத்திற்குள்ளானது.

அதே போல, தினத்தந்தியின் பவளவிழாவில் பிரதமர் மோடியுடன் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி, North - East - South - West என்ற வார்த்தைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து NEWS என்ற வார்த்தை உருவானதாக குறிப்பிட்டார். பிரமதர் முன்னிலையிலான உரையே இப்படி அமைந்தது, அந்த தருணத்தில் கேலிக்குள்ளானது.

வழக்கமாக முதலமைச்சர்கள் சட்டப்பேரவையில் பேசும் உரைகள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாலும் அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசும் உரைகள், அரசியல் அனுபவமுள்ளவர்களாலும் தயாரித்து அளிக்கப்படும்.