ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்காக நிதி முழுவதுமாக திரட்டப்பட்டு அதற்கான விழாவும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

Special Correspondent

இந்நிலையில், லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை தொடங்குவதற்கான முயற்சிகளை "TamilChairUK" என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் இருக்கைக்கும், தமிழ்த் துறைக்கும் என்ன வேறுபாடு பற்றி முதலில் அறிந்து கொள்ளுதல் அவசியம் .

ஒரேயொரு பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்படுவது தமிழ் இருக்கை என்று கூறுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய ஹார்வர்ட் தமிழ் இருக்கை குழுவின் உறுப்பினர்களிள் ஒருவரான கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.

"துறைத்தலைவரையும், அவர்களின் கீழ் பணியாற்றும் பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை கொண்டு தமிழில் இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்பும் வழங்கப்பட்டால் அதுவே தமிழ்த் துறையாகும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான நிதி முழுமையாக பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்துடனான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இன்னும் ஆறு முதல் ஒன்பது மாதங்களில் ஹார்வர்ட் தமிழ் இருக்கை தனது செயல்பாட்டை தொடங்கும் என்றும், இருக்கைக்கான பேராசிரியரை தேர்ந்தெடுக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருவதாகவும் முத்துலிங்கம் கூறுகிறார்.

Special Correspondent

ஹார்வர்ட் தமிழ் இருக்கையில் ஆராய்ச்சி மாணவராக சேருவதற்கான தகுதி குறித்து அவரிடம் கேட்டபோது, "தகுதியும், திறமையும் உள்ள மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழகத்தின் விதிமுறைக்குட்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்" என்று கூறினார்.

மேலும், கனடாவின் மிகப் பெரிய நகரமான டொரொண்டோவிலுள்ள டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான நிதி திரட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தமிழ் இருக்கைகள் தமிழ்த் துறைகளாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் அப்போது கூறினார்.

லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் எஸ்ஓஏஎஸ் (SOAS - School of Oriental and African Studies) கல்வி நிறுவனத்தில் 1931 முதல் இயங்கிவந்த தமிழ் படிப்புகள், 1995களுக்குப் பிறகு மாணவர் சேர்க்கை குறைந்ததாலும், கல்லூரியின் பொருளாதார முதலீடுகள் குறைந்ததாலும் நிறுத்தப்பட்டது.

பின்னர் உலகளாவிய தமிழர்களின் எழுச்சியாலும், புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழ் ஆர்வத்தாலும், ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் படிப்புக்கான தேவைகள் அதிகரித்துள்ளதாலும், தமிழ் படிப்புகளை மீண்டும் கொண்டுவருவது என்று பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக கூறுகிறார் லண்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கையின் தலைவரான செலின் சார்ச்.

தொடர்பு செய்திகள் : தமிழுக்கு பெருமை சேர்த்த கனடா அரசியல் தலைவர்கள்