அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அதிக மதிப்பெண்கள் போடப்பட்டதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
உமாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த 60 மாணவர்களின் விவரங்கள் அடங்கிய கோப்புகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அந்த மாணவர்களுக்கு சம்மன் அனுப்பி, நேரில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், தேர்வில் 24 மதிப்பெண் எடுத்த மாணவருக்கு மறுமதிப்பீட்டுக்குப் பிறகு 94 மதிப்பெண்கள் தரப்பட்டதும், இதுபோல மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த 16,636 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுபோல பருவத் தேர்வில் தோல்வி அடைந்து மறுமதிப்பீடு செய்த மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களை பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இவர்களது பட்டியலை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தயாரித்துள்ளனர்.
அதோடு, அவர்கள் எழுதிய தேர்வின் மொத்த மதிப்பெண்ணை விடவும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதும் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 593 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் தேர்வில் தோல்வியடைந்தவர்களின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் பணிக்கு மட்டும் பல்கலைக்கழகத்தின் சார்பில் 23 மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 2017ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடந்தது. தேர்வு எழுதியவர்களில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
அவர்கள் மூலம் ரூ.75 கோடி கட்டணமாகவே பல்கலைக்கழகம் வசூலித்தது. விண்ணப்பித்த மாணவர்களில் 73 ஆயிரத்து 733 பேர் தேர்ச்சி பெற்றதோடு, 16 ஆயிரத்து 636 மாணவர் கூடுதல் மதிப்பெண் பெற்றனர்.
இது தொடர்பாக, சென்னை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் மறு மதிப்பீட்டுப் பணியில் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், முறைகேடு நடைபெறும்போது அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த ஜி.வி.உமா, மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த பி.விஜயகுமார், ஆர்.சிவக்குமார், கண்காணிப்பாளர்களாக இருந்த ஆர்.சுந்தரராஜன், எம்.மகேஷ்பாபு, என்.அன்புச்செல்வன், சி.என்.பிரதீபா, எல்.பிரகதீஸ்வரன், எம்.ரமேஷ்கண்ணன், எஸ்.ரமேஷ் ஆகியோர் மீது 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் ஒரு விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பது தெரியவந்தது.
இந்த முறைகேட்டுக்கு மைய புள்ளியாக இருந்தவர் பல்கலை கழகத்தின் முந்தைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான உமா என்பது போலீஸாரின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதற்காக பல்கலை கழகத்தில் அவர் பதவிக்கு வந்த பின்னர் முறைகேடு குறித்த புகார் எழுந்தது. அப்போது அவர் , விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட சுமார் 1070 பேராசியர்கள் மீது புகார் கூறி அவர்கள் 3 ஆண்டுகள் விடைத்தாள் திருத்த தடை விதித்தார்.
மறு மதிப்பீடு செய்யும் பணி வழக்கமாக சென்னை அல்லது காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிலையில், அதனை திண்டிவனத்திற்கு உமா மாற்றி உள்ளார்.
இதனால் வழக்கமாக திருத்தும் பணிக்கும் வரும் ஆசிரியர்கள் வர மறுக்க, முறைகேட்டுக்கு ஒத்துழைக்கும் ஆசிரியர்களை பணியில் அமர்த்தி, அவர்களுக்கு, எந்தெந்த மாணவர்கள் பணம் கொடுத்தார்களோ, அவர்களது விடைத்தாள்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கியதும் தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக உமா, திண்டிவனம் கல்லூரி பேராசிரியர்கள் சிவகுமார், சுந்தர ராஜன் மற்றும் அன்புசெல்வன், பிரதீபா, பிரகதீஸ்வர், ராமேஷ் கண்ணன், ரமேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த முறைகேட்டில் உமா அவர் பதவியில் இருந்த மூன்றாண்டு காலமும் ஈடுபட்டிருக்கலாம் என்றும், இதன் மூலம் ரூ.240 கோடி அளவுக்கு பணம் கைமாறி இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த முறைகேட்டில் உமாவுடன் மேலும் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்ற நிலையில், பல்கலை கழகத்தைச் சேர்ந்த மேலும் பலருக்கும் குறி வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மதிப்பெண் முறைகேடு தொடர்பாக மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 50 மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதேபோல் 9 ஆண்டுகளுக்கு வெற்று மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிப்பதற்கான தொகையை முன்கூட்டியே பெற்றும் மோசடி நடைபெற்றுள்ளது. இது குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது தேர்வுக்கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினராக உள்ள உமா அந்த பதவியில் இருந்து பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மறுமதிப்பீடு முறைகேடு குறித்து முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் கூறுகையில், ஒரு சிலரின் தவறால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தற்போது அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இத்தகைய புகாரால் பல்கலை. மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விடுவர் என்றும் அண்ணா பல்கலை.யில் நேர்மையான அதிகாரிகள் இருந்ததால் முறைகேடு நடைபெறவில்லை என விஸ்வநாதன் தெரிவித்தார்.
தொடர்பு செய்திகள் : நீட் தேர்வு குதிரையா கழுதையா