காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Special Correspondent

இந்த மனுவுக்கு பதிலளித்த சென்னை மாநகர காவல்துறை, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என கூறியிருந்தது. அதிகளவில் பொதுமக்கள் கூடும் போது பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“காவிரி விவகாரத்தில் உரிமை கோருவதை விட மெரினா கடற்கரையை பராமரிப்பதுதான் முக்கியமா?” என நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், “போராட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு உரிமை உண்டு. கட்டுப்படுத்த இல்லை” எனவும் கூறினர்.

“பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூடும் போது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் பண்டிகையை தடை செய்ய வேண்டும் என கோர முடியுமா?” என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் மெரினாவில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு ஒருநாள் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், அமைதியான முறையில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. எழுத்துரிமை மற்றும் பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது எனவும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

90 நாள் அனுமதி கோரிய நிலையில், ஒரு நாள் மட்டுமே அனுமதி அளித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அய்யாக்கண்ணு தரப்பு வழக்கறிஞர் கூறி உள்ளார்.

மெரினாவில் அய்யாக்கண்ணு போராட்டம் நடத்த அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை காவல்துறை மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மேல் முறையீட்டு மனு விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது.