பொதுப்பிரச்சனைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது வரம்பு மீறி பேச வேண்டாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ எம்பிக்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் காஷ்மீர் சிறுமி மற்றும் உன்னாவ் பெண் விவகாரங்கள், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான பாஜக நிர்வாகிகளின் கருத்துகளுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் நமோ ஆப் வீடியோ கான்ஃப்ரன்சிங் வாயிலாக உரையாற்றிய நரேந்திர மோடி, அர்த்தமற்ற கருத்துக்களை கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ எம்பிக்களுக்கு உத்தரவிட்டார்.
நாம் தொடர்ந்து தவறுகள் செய்வதன் மூலம் ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறோம் என்றும், பாஜக கட்சியினர் ஊடகங்களின் கேமரா முன்பு சமூக விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் போன்று வார்த்தைகளை பேசி வருவதாக மோடி குறிப்பிட்டார்.
தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் என எந்த பிரச்னைகளை எடுத்துக் கொண்டாலும் நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகள் ஊடகங்களில் ஊதி பெரிதாக்கப்படுகின்றன என்றும் கூறிய மோடி.
இதை பற்றிய கொஞ்சமும் கவலையின்றி நாம் நமது கருத்துக்களை கூறி வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது. எனவே இதுபோன்ற அர்த்தமற்ற கருத்துக்கைள கூறுவதையும், ஆர்வக்கோளாறில் கருத்துக்களை தெரிவிப்பதையும் நாம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடகங்கள் அவர்களது பணியை செய்யட்டும் என மோடி கூறினார்.
பாஜகவினரின் வரம்பு மீறிய பேச்சுகளை கட்டுப்படுத்த சில மாதங்களுக்கு முன்பும் இதேபோன்ற உத்தரவை மோடி பிறப்பித்தாலும் பாஜவினர் மோடியின் பேச்சை கண்டு கொள்ளாமல் வருவது குறிப்பிடதக்கது .