உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருக்கிறார்.

Special Correspondent

இவருடைய செயல்பாடு குறித்து சர்ச்சை நிலவுகிறது. இவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும், உச்ச நீதிமன்றத்தின் செயல்பாட்டில் அரசு தலையீடு இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தை சேர்ந்த 4 மூத்த நீதிபதிகள் கடந்த ஜனவரி 12ம் தேதி டெல்லியில் பத்திரிகையாளர்களை கூட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.

நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் இந்த குற்றச்சாட்டுகளை கூறினர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், தங்களை விட குறைந்த அனுபவம் கொண்ட ஜூனியர் நீதிபதிகளிடம் விசாரணைக்கு ஒதுக்கப்படுவதாகவும் இவர்கள் குற்றம்சாட்டினர்.

இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும் யோசனையை மார்்க்சிஸ்ட் கட்சி முதன் முதலில் தெரிவித்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதித்துறை நிர்வாகத்தை தவறாக பயன்படுத்துகிறார், சக நீதிபதிகளின் அதிருப்திக்கு ஆளானவர் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளை ஆதாரமாக வைத்து, காங்கிரஸ் இதன் பிறகே கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியது...

அப்போது முதல் இது பற்றி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை நடத்தி வந்தன. இருப்பினும், நாட்டின் தலைமை நீதிபதி மீது இதுபோன்ற தீர்மானம் கொண்டு வருவது பெரிய இழுக்காக அமைந்து விடும் என்பதால், அதில் தயக்கம் காட்டி வந்தன.

இந்நிலையில், பாஜ தலைவர் அமித்ஷா மீதான சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா இறந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, தீபக் மிஸ்ரா மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களை சந்தித்த கபில்சிபல், ‘‘ தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் அவருடைய ஐந்து தவறான நடவடிக்கைகளும், பதவியை துஷ்பிரயோகம் செய்வது பற்றியும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இந்த தீர்மானத்தை நாங்கள் கனத்த இதயத்துடன் கொண்டு வருகிறோம். அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்றதில் இருந்தே, அவருடைய நடவடிக்கைகள் பற்றி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம். தலைமை நீதிபதி பதவி என்பது, மற்ற எந்த அலுவலக பதவிகளையும் விடவும் மேலானது.

எனவே, தலைமை நீதிபதியின் செயல்பாடுகள் பற்றிய உண்மை வெளியாக வேண்டும் என்றால், அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். நீதித்துறை உறுதியாகவும், சுதந்திரமாகவும் இருந்தால்தான் நீதியை நிலைநாட்ட முடியும்.

நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலில் இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளே நம்புகின்றனர்’’ என்றார். பின்னர், மாநிலங்களவையை சேர்ந்த 64 எம்பி.க்கள் கையெழுத்திட்ட பதவி நீக்க தீர்மானத்தை மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் சமர்ப்பித்தனர்.

இதில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 7 கட்சிகளை சேர்ந்த எம்பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் தீர்மான நோட்டீஸ் வழங்கி இருப்பது இதுவே முதல்முறை என்ற நிலையில் தலைமை நீதிபதியை பதவி நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீசை நிராகரித்தார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு.

சட்ட வல்லுநர்களின் பரிந்துரையை ஏற்று பதவி நீக்க தீர்மானத்திற்கான நோட்டீஸ் நிராகரித்து உள்ளார். இதற்கு தீர்மான விவரங்களை முன்கூட்டியே தெரிவித்தது தவறு என நிபுணர்கள் கூறி உள்ளனர்.

தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா, 1953–ம் ஆண்டு அக்டோபர் 3–ந் தேதி பிறந்தவர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். 1977–ம் ஆண்டு, பிப்ரவரி 14–ந் தேதி தன்னை ஒரு வக்கீலாக பதிவு செய்து கொண்டார்.

1996–ம் ஆண்டு, ஜனவரி 17–ந் தேதி ஒடிசா ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு, மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

1997–ம் ஆண்டு, டிசம்பர் 19–ந் தேதி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2009–ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23–ந் தேதி பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆனார். 2010–ம் ஆண்டு, மே மாதம் 24–ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.

2011–ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 10–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இப்போது கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இந்த நிராகரிப்பின் மூலம் பாஜக மற்றும் தலைமை நீதிபதி தொடர்ப்பு சம்பந்தமாக இனி அரசியல் களத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேசும் என்றும் இது பாலியல் குற்றசாட்டில் தொடர்ந்து சிக்கி வரும் பாஜக மற்றும் அர்எஸ்எஸ் க்கு தலைவலியை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருந்து தெரிவித்து வருகின்றனர்...