பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் கருப்பு பணப்புழக்கம் அதிகரித்திருப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
ஒட்டு மொத்த மக்களையும் துயரத்தில் ஆழ்த்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்பு பணத்தையும், கள்ள நோட்டுக்களையும் ஒழித்து விட்டதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெருமையுடன் பேசி வருகிற்து.
ஆனால் மத்திய அரசின் அங்கமான நிதி நுண்ணறிவு பிரிவு அறிக்கை அதற்கு நேரெதிராக அமைந்துள்ளது. அதன் பிறகு பணமதிப்பு நீக்கத்திற்கு பிந்தைய நிதியாண்டில் கள்ள நோட்டுக்களின் புழக்கம் வெகுவாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகத்திற்கிடமான பணப்ரிமாற்றம் சுமார் 5 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வங்கி மற்றும் மற்ற நிதித்துறைகளில் மூன்றேகால் லட்சம் கள்ளநோட்டு பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2016-2017 ஆண்டில், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மற்றும் பல்வேறு நிதித்துறை நிறுவனங்களில் 400 சதவிகிதத்திற்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-16ல் சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் 1 லட்சத்து 5 ஆயிரமாக இருந்த நிலையில், 2016-17ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 3 லட்சத்து 61 ஆயிரத்து 215 பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வி என்ற எதிர்கட்சிகளின் விமர்சனங்களை உண்மையாக்கும் வகையில் மத்திய நுண்ணறிவு பிரிவின் அறிக்கை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதனை பற்றி கருத்து கூறாமல் மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது.