காஷ்மீரிலுள்ள கதுவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிபா ஜனவரி 10ம் தேதி கடத்தப்பட்டு பாலியல் பலாத்தகாரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

Special Correspondent

இந்த வழக்கில் சிறுமி ஆசிபாவிற்கு ஆதரவாக வாதாட இருக்கும் வழக்கறிஞர் தீபிகா ராஜவத் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், "இந்த வழக்கிலிருந்து விலகி விடுங்கள் என எனக்கு மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன. நான் எப்போதுவரை உயிருடன் இருப்பேன் என எனக்கு தெரியாது. நான் எப்போதுவேண்டுமானாலும் கொல்லப்படலாம், பலாத்காரம் செய்யப்படலாம். நான் ஆபத்தில் இருப்பதை உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளேன்" என கூறியுள்ளார். இந்த வழக்கில் ஹிந்து கோவில் பூசாரி , 3 போலீசார் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிறுமி ஆசிபாவிற்கு நடந்த கொடுமையை எதிர்த்து நீதி வேண்டி கையில்
"Iam Hindustan
Iam ashamed
#justice for our child. 8 years old. Gangraped.
Murdered in ‘devi’ thaan temple.
#kathua"

என்று எழுதிய பதாகையை கையில் ஏந்திய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

மேலும் இது குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோவில் பேசியபோது...."நாட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதில் ஒரு சில பிரச்சனைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதில் ஒன்றுதான் பெண்கள் பாதுகாப்பு.

ஆண்களும், பெண்களும், சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பார்கள். நானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன். 5 வயதில் நடக்கும் ஒன்றை நான் எப்படி அம்மா, அப்பாவிடம் எப்படி சொல்லுவேன்.

எனக்கு அப்போது என்ன நடந்தது கூட எனக்கு தெரியாது. பாலியல் தொல்லைகள் கொடுப்பது எல்லாம் வெளியாட்கள் மூலம் நடப்பதில்லை. நமக்கு தெரிந்த உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகத்தான் நடக்கிறது. எனவே எல்லா பெற்றோர்களும் தயவு செய்து பொறுப்புடன் இருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு யார் எப்படி பேசினால் தப்பு?, எப்படி தொட்டால் தப்பு? என்று 2 வயதில் இருந்தே பேச ஆரம்பியுங்கள்.

குழந்தைகளுக்கு பள்ளியில் என்ன நடக்கிறது. டியூசனில் என்ன நடக்கிறது என்று நமக்கு தெரியாது. எனவே பாதுகாப்பு குறித்து அதிகம் சொல்லிக் கொடுங்கள். நாம் போலீசை நம்பியே இருக்க முடியாது. அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் குழுவாக இணைந்து உங்கள் தெருவில் என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். தவறு நடந்தால் தட்டி கேளுங்கள். தற்போது எனக்கு வெளியே சென்றாலே பயமாக இருக்கிறது. யாரை பார்த்தாலும் சந்தேகத்துடன் பார்க்க தோன்றுகிறது. பாலியல் துன்புறுத்தல் மிக தவறானது. இதனை அழித்தால் நாம் ஒரு அமைதியான இடத்தில் வாழலாம்" என்றார்.