ஜம்மு காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

Special Correspondent

அந்த சிறுமியின் பெற்றோர், ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். அச்சிறுமிக்கு ஒரு வயதான நிலையில், அவரது தாய் வழி உறவுத் தம்பதி அவரை தத்தெடுத்தனர். அவர்களோடு அந்தச் சிறுமி ரசானாவில் வாழ்ந்து வந்த நிலையில் இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், சிறுமியை பெற்றெடுத்த தாயார் கூறுகையில், "என் மகள் அழகும், அறிவும் கொண்டவள். அவள் வளர்ந்த பிறகு மருத்துவராக வேண்டுமென விரும்பினேன். அவளுக்கு 8 வயது தான் ஆகியிருந்தது.

அவளை ஏன் இவ்வளவு கொடூரமாகக் கொல்ல வேண்டும்? இப்போது எனது ஒரே விருப்பம், எனது மகளுக்கு இத்தகைய கொடுஞ்செயலை செய்த குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும். அப்போது தான் வேறு எந்தவொரு குடும்பமும் இதுபோன்று பாதிக்கப்படாது' என்றார்.

சிறுமியை பெற்ற தந்தை கூறுகையில், "ஹிந்துக்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு அறியாத எனது மகள், கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை இந்த நாடும், உலகமும் அறியும். அவள் எங்களுக்கு மட்டும் அல்ல; அனைவருக்கும் மகள். இந்த சம்பவத்தை மதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது.

எங்களுக்கு சிபிஐ விசாரணை தேவையில்லை. காவல்துறை குற்றப் பிரிவு விசாரணை மீது நம்பிக்கை உள்ளது. கொலையாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க வேண்டும்' என்றார்.

சிறுமியின் வளர்ப்புத் தாயார் கூறுகையில், "ரசானா பகுதியில் உள்ள ஹிந்துக்களுடன் முன்பு இணக்கத்தோடு பழகி வந்தோம். ஆனால், இச்சம்பவத்துக்குப் பிறகு அந்த உறவு கெட்டுவிட்டது. தற்போது நாங்கள் அச்சத்தோடு உணர்கிறோம். எங்கள் மகளுக்கு நீதி வேண்டும்' என்றார்.

அவரது வளர்ப்புத் தந்தை கூறுகையில், "பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்' என்று பிரதமர் மோடி கூறுகிறார். இதுபோன்ற சம்பவங்கள் நீடித்தால் பெண் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது? அவர்களுக்கு எவ்வாறு கல்வியளிப்பது? குற்றவாளிகளுக்கு அமைச்சர்கள் ஆதரவளிக்கின்றனர். இது தவறானது' என்றார்.

சிறுமியை பெற்றெடுத்த தாயார் புதைக்க நிலம் தரமறுத்தகாரணத்தினால் இரண்டு நாளைக்கு ஒரு தரம் வந்து பல மணி நேரம் சிறுமி புதைத்த இடத்தில் அழுவதாக அவரின் உறவினர்கள் தெரிவிததனர்...