சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தை கிண்டலடிக்கும் விதமாக, இளைஞர்கள் சிலர் போலீசாரிடம் கையெடுத்து கும்பிடுவதைப் போன்ற ஒரு படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம்’ என்று நக்கலடித்திருந்தார் ஹெச்.ராஜா.
ஆனால் உண்மையில் அது நேற்று எடுக்கப்பட்ட படம் இல்லை. சென்றவருடம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எடுத்த புகைப்படம். இதை ஆதாரத்துடன் வெளியிட்டு ஹெச்.ராஜாவுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள் ட்விட்டர்வாசிகள்.
மேலும் அந்த புகைப்படத்தில் இருப்பது தமிழ் நடிகர் சௌந்தர ராஜா ஆவார். ஹெச்.ராஜாவின் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சௌந்தர ராஜா ‘இது மெரினா போராட்ட களத்தில் எடுத்த புகைப்படம். பெண்களை, குழந்தைகளை அடிக்க வேண்டாம் என்று கேட்டபோது. உங்க திறமை கண்டு வியக்கிறேன். திருப்பி அடிக்கத்தெரியாம இல்ல. அடிச்சா தாங்க மாட்டீங்க. வன்முறை தவறு. அதனால் பொறுமை காத்தோம். மனிதநேயத்துடன்’ என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தவறான செய்திகளை பதிவிடுவதும் பரப்புவதும் வழக்கமாகி வருகிறது. பெரும் எதிர்ப்புகளை சந்திக்கும் செய்திகளை நீக்கிவிடுவதும் இல்லை ‘போட்டது நானல்ல, அட்மின்’ என்று நழுவுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் ராஜா.
தொடர்ந்து பொய்களையும் தவறான செய்திகளையும் பகிர்ந்து வரும் ஹெச்.ராஜாவின் மீது பா.ஜ.க மேலிடம் நடவடிக்கை எடுக்கா விட்டால் அதன் பெயர் மேலும் ரிப்பேர் ஆகும் என்கிறார்கள் அவரை எதிர்க்கும் பாஜக கட்சியில் உள்ள ஒரு முக்கிய பிரமுகர்.