சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கிறது. தினமும் சாலை மறியல், ரெயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்தநிலையில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன. பல அமைப்புகள் போட்டியை காண ரசிகர்கள் நேரில் செல்லக்கூடாது என தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டன.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது :
"பல்வேறு தரப்பில் இருந்தும் வரும் கடும் எதிர்ப்புகளால் இந்த போட்டியை காணவரும் ரசிகர்கள் பலவித சோதனைகளுக்கு பின்பே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன".
ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பின் வருமாறு :-
* பைகள், தோல்பைகள், சூட்கேஸ்கள் போன்ற எந்தவிதமான பைகளையும் கொண்டு செல்லக்கூடாது.
* செல்போன்கள், ரேடியோ, கம்ப்யூட்டர்கள், மடிக்கணினிகள், ரிமோட் மூலம் இயங்கும் கருவிகள், ரிமோட் மூலம் இயங்கும் கார் சாவிகள் உள்ளிட்ட எந்தவித எலக்ட்ரானிக் பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது.
* வீடியோ கேமராக்கள், பைனாகுலர், ஆடியோ பதிவு செய்யும் கருவிகள், இசை சம்பந்தமான கருவிகள் போன்ற எதனையும் எடுத்து செல்லக்கூடாது.
* சிகரெட்டுகள், பீடிகள், தீப்பெட்டிகள், வெடிபொருட்கள், பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கும் அனுமதி இல்லை.
* கண்ணாடி பொருட்கள், கத்திகள், கத்தரிக்கோல் போன்ற அனைத்து விதமான ஆயுதங்களும் எடுத்து செல்லக்கூடாது.
* தெர்மாகோல் அட்டைகள், தண்ணீர் பாட்டில்கள், கருப்பு நிறத்திலான கைக்குட்டைகள், கருப்பு கொடிகள், கருப்பு துணிகள் போன்றவற்றுக்கும் அனுமதி இல்லை.
* குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது.
தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் எந்த செயலும் செய்யக்கூடாது. போட்டி நடைபெறும்போது சட்ட விரோத செயல்கள், வன் முறைகளில் ஈடுபட்டாலும், இன வெறியை தூண்டும் வகையில் கோஷம் எழுப்பினாலும் மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
செல்போனையும், மற்ற பொருட்களையும் கொண்டு சென்றால் மைதானத்தில் உள்ள காவலர்களிடம் ஒப்படைத்து விட்டு போட்டியை பார்க்கலாம் என ரசிகர்கள் நினைத்தால் அது முடியாது.
ஏனென்றால் மைதானத்தின் நுழைவுவாயில் சோதனை பகுதியில் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை வைப்பதற்கு என்று அறைகள் ஏதும் இல்லை. அந்த பொருட்களை வாங்கி வைப்பதற்கு நுழைவு பகுதியில் போலீசாரோ, மற்ற பாதுகாவலர்களோ யாரும் இருக்க மாட்டார்கள்.
எனவே செல்போன் உள்ளிட்ட பொருட்களை மறந்தும்கூட எடுத்துச்சென்றால் போட்டியை பார்க்கமுடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டுக்குத்தான் திரும்பி வர வேண்டியது இருக்கும். மைதானத்தில் இருந்து வெளியே சென்று விட்டால் மீண்டும் உள்ளே வர முடியாது. கிரிக்கெட் போட்டி எதிர்ப்பு அலைகள் காரணமாக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கூடுதல் கமிஷனர் சாரங்கன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். கிரிக்கெட் மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் போலீசார் அரண் போல நிறுத்தப்படுவார்கள்.
கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இதுதவிர அருகில் உள்ள பறக்கும் ரெயில் நிலைய பகுதிகளிலும், தண்டவாளங்களிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். போட்டியை காணவரும் ரசிகர்களை யாரேனும் தடுத்து வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.
அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதியில் எந்தவித போராட்டங்களுக்கும் அனுமதி இல்லை" என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று பயிற்சிக்காக சொகுசு பஸ்சில் வந்தபோது, பஸ்சிற்கு முன்பாகவும், பின்பாகவும் போலீஸ் ரோந்து வாகனங்கள் வந்தன.
கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டபோதும் சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்பு போடப்பட்டது. கிரிக்கெட் மைதானத்தின் ஒவ்வொரு நுழைவுவாயிலிலும் ஒரு துணை கமிஷனர் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுவார்கள்.