காவிரி இறுதித் தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு, புதுச்சேரி அரசு, புதுச்சேரி கொறடா ஆர்.கே.ஆர். அனந்தராமன், கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி. ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே ஆஜராகி, 'உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி அளித்த காவிரி இறுதித் தீர்ப்பு தெள்ளத் தெளிவாக உள்ளது. அடிப்படை ஆங்கிலம் தெரிந்த அனைவரும் தீர்ப்பை புரிந்து கொள்ள முடியும். செயல்திட்டம் என்பது (காவிரி மேலாண்மை) வாரியத்தை மட்டுமே குறிப்பிடுகிறது. இருப்பினும், தீர்ப்பு தெளிவாக இல்லை என மத்திய அரசு கூறுவது ஏன்? எனவே, மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது' என்றார்.
மத்திய அரசு சார்பில் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, 'சில குழப்பங்கள் உள்ளதால், தீர்ப்பை அமல்படுத்த மூன்று மாதம் அவகாசம் வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா , '6 வாரங்களுக்குள் செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். ஆனால், தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. எனவே, காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உரிய செயல்திட்டத்தை உருவாக்கி தனது நம்பகத் தன்மையை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சேகர் நாப்டே, ஜி. உமாபதி ஆகியோர் வாதிடுகையில், 'உரிய நீரை கர்நாடகம் திறக்காததால், தமிழக மக்கள் வேதனையடைந்துள்ளனர். தண்ணீர் திறப்பு தொடர்பாக கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தைத் நாட வேண்டியுள்ளது' என்றனர்.
கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஷியாம் திவான், மோகன் கதார்கி, 'இரு மாநிலங்களும் (தமிழகம், கர்நாடகம்) உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. கடந்த 28 ஆண்டுகளில் நடுவர் மன்ற உத்தரவை வறட்சி காரணமாக நான்கு முறை அமல்படுத்த முடியவில்லை. நடுவர் மன்ற உத்தரவை திட்டமிட்டு கர்நாடகம் அலட்சியப்படுத்தவில்லை' என்றனர்.
மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், 'காவிரி இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்திட்டம் (ஸ்கீம்) குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் சிரமம் ஏதும் இல்லை. வாரியத்துக்கு தலைமை ஏற்க நிர்வாகத் துறை அதிகாரியை நியமிப்பதா? அல்லது தொழில்நுட்பத் துறை அதிகாரியை நியமிப்பதா? என்பதில் சிரமம் உள்ளது. விரிவான செயல்திட்டம் (ஸ்கீம்) என்பது காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவில் தெரிவித்தப்படி அமைக்க வேண்டுமா? என தெளிவுப்படுத்த வேண்டும்' என்றார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, '(காவிரி) நடுவர் மன்ற உத்தரவை இறுதித் தீர்ப்புடன் இணைத்துவிட்டோம். நீண்ட காலமாக உள்ள காவிரி பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் அரும்பாடுபட்டு தீர்ப்பை அளித்தோம்.
உரிய நீர் திறக்கப்படுகிறதா என்பதை ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் கண்காணிக்க முடியாது. எனவேதான் சட்டப்படி விரிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், மத்திய அரசு தேவையான எதையும் இதுவரை செய்யவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை முன்னரே அணுகியிருக்க வேண்டும்' என்றார்.
'காவிரி இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விரிவான செயல்திட்டம் தொடர்பான வரைவை நீதிமன்றத்தில் மே 3-ஆம் தேதிக்குள் மத்திய அரசு அளிக்க வேண்டும். மாநிலங்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு செயல்திட்ட வரைவில் மாற்றம் செய்வது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும்.
இது இறுதியான தீர்ப்பு என்று உச்சநீதிமன்றமே கூறிய நிலையில் மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்யாமல் நாள் கடத்தும் உச்சநீதிமன்றம்., வரைவு திட்டம் எதுவானாலும் உச்சநீதிமன்றம் ஒத்துக்கொள்ளும் நிலைதான் தற்போது உள்ளது.
எனவே, இன்னும் சாதகமான தீர்ப்பு என்று நம்பிக்கொண்டிராமல் அதிகாரம் இல்லாத ஒரு அமைப்பை மத்திய அரசு அமைத்துவிடாமால் தடுக்க தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று காவிரியின் தமிழர் நலன் சார்ந்த சட்ட வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய “காவிரி உரிமை மீட்பு பயணத்தின்” மூன்றாம் நாளான இன்று (09-04-2018) அம்மன் பேட்டை, அம்மாபேட்டை, குமாரமங்கலம் வழியாக நீடாமங்கலம் பகுதியை சென்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்த விவரம் " டெல்டா மாவட்ட பகுதிகளான இந்த கிராமப் பகுதிகளில் எல்லாம் பயணிக்கின்ற போது, இங்கிருக்கின்ற விவசாயப் பெருமக்களும் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை கண்கூட பார்க்க நேர்ந்தது. ஒரு காலத்தில் மிகச்சிறப்பாக விவசாயம் நடைபெற்ற நிலங்கள் எல்லாம் காய்ந்து போய் இருப்பதையும், காவிரி நீர் கொஞ்சி விளையாடிய பகுதிகள் எல்லாம் வறண்டு போய், நீர் சென்றதற்கான அடையாளமே இல்லாத அளவிற்கு அந்தப் பகுதிகள் காட்சியளித்தது வேதனையாக அமைந்தது.
நம் தமிழக மக்கள் அதிலும் குறிப்பாக விவசாயப் பெருமக்கள் இந்தளவிற்கு, தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருப்பதை சிறு துளியேனும் கருத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இந்த மத்திய, மாநில அரசுகள் தமிழகத்திற்கு செய்த துரோகத்தை தமிழகம் என்றைக்கும் மறக்காது. அதேபோல், தமிழக நலன் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இந்தப் பயணம் ஓயாது என்கிற உறுதியை அங்கிருந்த மக்களிடத்திலும், விவசாயிகளிடத்திலும் தெரிவித்தேன்"என்று கூறினார்.
மேலும் ஸ்டாலினுக்கு செல்லும் இடம் எல்லாம் கிடைக்கும் வரவேற்பு ஆளும் அதிமுக மற்றும் பாஜகவுக்கு தலைவலியை எற்படுத்துவதாக அதிமுக,பாஜக உட்கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்கள்.