காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலக பிரபலங்கள் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஒரு நாள் அடையாள அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்ஸி அமைப்பினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் போராட்டத்தில் நடிகர்கள் விஜய், விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, சத்யராஜ், சிவகுமார் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மவுன போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள திரையுலக பிரபலங்கள் இடைவிடாது பேசிக் கொண்டு இருந்தனர் . மேடையில் அமர்ந்திருக்கும் விஜய்யுடன் எஸ்.ஜே. சூர்யா பேசிக் கொண்டே இருந்தனர். மற்ற நடிகர் நடிகைகளும் மறுபக்கம் பிசியாக பேசிக் கொண்டே இருந்தனர்...
முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்ப்பை மத்திய அரசு சம்பாதிக்க வேண்டி வரும். காவிரி வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பை காட்டும் வகையில், ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடும் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும்; ரசிகர்களும் கருப்பு உடை அணிந்து அப்போட்டிகளை காண வேண்டும்' என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சினிமா ஸ்டிரைக்கால் படப்பிடிப்பு இல்லாமல் இருந்த பிரபலங்கள் போராட்ட களத்தில் அனைவரையும் பார்த்ததும் பேசத் துவங்கிவிட்டனர். இப்படி இடைவிடாது பேசுவதற்கு பெயர் மவுன போராட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மவுன போராட்டத்தில் திரையுலகினர் பேசுவதை பார்க்கும்போது காவிரி பிரச்சனைக்காக நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுகவினர் மூக்கு முட்ட சாப்பிட்டது தான் நினைவுக்கு வருவதாக கூறுகிறார்கள்.