ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரத்தில் 56வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் அங்கு சென்றனர்.
போராட்டத்தின் போது பேசிய பிரேமலதா, குமரெட்டியாபுரம் போராட்டத்தை தங்களது தொலைக்காட்சி மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் கூறினார்.
தாம் இங்கு வந்திருப்பதால் மட்டுமே ஊடகங்கள் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனைக் கேட்ட செய்தியாளர்கள், பிரேமலதாவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சற்று தொலைவில் வேறு ஒரு இடத்தில் செய்தியாளர்கள் நின்றனர். அப்போது அங்கு வந்த தே.மு.தி.க.வினர் பலரும், செய்தியாளர்களை தகாத வார்த்தைகளில் பேசியதாகக் கூறப்படுகிறது.
பிரச்சனை வெடிக்க பிரேமலதாவும், சுதீசும் கண் ஜாடை காட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விடவே, செய்தியாளர்கள் மீது தே.மு.தி.க. தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் சிப்காட் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் மற்றும் தே.மு.தி.க தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.