காவிரி உரிமையை மீட்கவே நடைப்பயணம். இது அரசியலுக்காக இல்லை என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Special Correspondent

திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் திருச்சி மாவட்டம், முக்கொம்பில் சனிக்கிழமை காவிரி உரிமை மீட்புப் பயணம்- நடைப்பயணத் தொடக்க விழாவில் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியது :

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரக் கெடு முடிந்த நிலையில், தமிழக அரசு மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறஉள்ளது.

விசாரணையின் முடிவில் நல்லத் தீர்ப்பு வரலாம் என நம்புகிறோம். ஒரு வேளை சாதகமான தீர்ப்பு வராதபட்சத்தில் இன்னும் போராட்டத்தை விரிவுப்படுத்தி தமிழகம் குலுங்கும் வகையில், காவிரி உரிமை மீட்புப் பயணம் தமிழகம் தழுவிய அளவில் விரிவுப்படுத்தப்படும்.

இந்த பயணம் அரசியல் நோக்கத்துக்காக அல்ல, உரிமையை மீட்கும் பயணமாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கர்நாடக அரசும், மத்திய அரசும் மறுக்கிறது. அவர்களைக் கண்டிக்கக்கூட தமிழக அரசு தயங்குகிறது.

மத்திய அரசை எதிர்த்து கண்டனம் தெரிவிக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் 6 வாரக் கெடு விதித்திருந்த நிலையில், கெடு முடிவதற்கு 4 நாள்கள் முன்பு கூட, தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நல்ல முடிவு வரும் எனக் கூறினார். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள், ரயில் மறியல் போராட்டங்கள், முழுஅடைப்புப் போராட்டம், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்திய பிறகுதான், காவிரி உரிமை மீட்புப் பயணத்தை நடைப்பயணமாகத் தொடங்கியிருக்கிறோம்.

திருச்சி முக்கொம்பில் தொடங்கியிருக்கும் நடைப்பயணம் கடலூரில் முடியும்போது நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். 1938-ஆம் ஆண்டில் இந்தியை எதிர்த்து பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் திருச்சியிலிருந்து சென்னை வரை நடைப்பயணம் நடைபெற்றது. தந்தை பெரியார் அந்த பயணத்தைத் தொடக்கி வைத்தார்.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டில் காவிரி உரிமையை மீட்கும் வகையில் தற்போது திருச்சி முக்கொம்பிலிருந்து கடலூர் வரையிலான பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தொடக்கி வைத்திருக்கிறார்.

இந்தி எதிர்ப்பு நடைப்பயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றது போல, இந்த உரிமை மீட்புப் பயணமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார் ஸ்டாலின்.

காவிரி உரிமையை மீட்கவே நடைப்பயணம் காண ஸ்டாலின் செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாக திரள்வதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.