இந்த மாதம் (ஏப்ரல்) முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 5 ஆண்டுகளில் உள்ளூரில் இந்திய கிரிக்கெட் அணி மோதும் இரு நாடுகள் இடையிலான போட்டி தொடருக்கான டெலிவிஷன் உரிமத்தை பெற மின்னணு ஏலம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

Special Correspondent

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக்குழு சிஓஏ பரிந்துரையால் ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலத்தை மின்னனு முறையில் பிசிசிஐ நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதுவரை டெண்டர் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த ஒளிபரப்பு உரிமம், மிகுந்த வெளிப்படை தன்மையுடன் இருக்க ‘ஆன்-லைன்’ மூலம் ஏலம் நடைபெறுகிறது.

ஒளிபரப்பு உரிமம் 3 வகையாக பிரித்து வழங்கப்படுகிறது.
1. சர்வதேச டெலிவிஷன் உரிமம் மற்றும் இந்தியா தவிர்த்து எல்லா நாடுகளுக்கான டிஜிட்டல் உரிமம்,
2. இந்திய துணை கண்டத்துக்கான டிஜிட்டல் உரிமம்,
3. சர்வதேச ஒருங்கிணைந்த உரிமம் என 3 பிரிவுகளில் விற்பனை செய்கிறது.

2018-19-ம் ஆண்டில் ஒரு போட்டிக்கான குறைந்தபட்ச சர்வதேச டெலிவிஷன் உரிமம் மற்றும் இந்தியா தவிர்த்த எஞ்சிய நாடுகளுக்கான டிஜிட்டல் உரிமம் ஆகியவை ரூ.35 கோடியாகவும், இந்திய துணை கண்டத்துக்கான டிஜிட்டல் உரிமம் ரூ.8 கோடியாகவும், சர்வதேச ஒருங்கிணைந்த உரிமத்துக்கான தொடக்க கட்டணம் ரூ.43 கோடியாகவும் தொடக்க விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2019-2023-ம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு போட்டிக்கான சர்வதேச டெலிவிஷன் உரிமம் மற்றும் இந்தியா தவிர்த்த எஞ்சிய நாடுகளுக்கான டிஜிட்டல் உரிமம் ரூ.33 கோடியாகவும், இந்திய துணை கண்டத்துக்கான டிஜிட்டல் உரிமம் ரூ.7 கோடியாகவும், சர்வதேச ஒருங்கிணைந்த உரிமம் ரூ.40 கோடியாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணி உள்ளூரில் 22 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 38 டி20 போட்டிகளில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் டெலிவிஷன் ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதில் ஸ்டார், சோனி, ஜியோ நிறுவனங்கள் தொலைக்காட்சி உரிமத்துக்கும், யப் டிவி, பேஸ்புக், கூகுள் உள்ளிட்டவை டிஜிட்டல் உரிமத்துக்கும் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் ஒரு போட்டிக்கான குறைந்தபட்ச அடிப்படை விலையாக அதிக தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக ஸ்டார், சோனி நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

2018 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான ஐ.பி.எல். போட்டிக்கான டெலிவிஷன் உரிமத்தை ஏற்கனவே ஸ்டார் நிறுவனம் ரூ.16,347 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.