எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளதாகக் கூறி மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் திங்கள்கிழமை பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

Special Correspondent

இதில், வன்முறை மூண்டதை அடுத்து, துப்பாக்கிச் சூடு மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

Special Correspondent

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்வதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 20-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

நேர்மையாகப் பணியாற்றும் ஊழியர்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த தீர்ப்பு அளிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. எனினும், இதற்கு பல்வேறு தலித் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், திங்கள்கிழமை தேசிய அளவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த தலித் அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், பிகார், ஹரியாணா, சண்டீகர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தலித் மக்கள் கூடி போராட்டம் நடத்தினர். இதில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. போலீஸார் மீது கல்வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு, பொதுச் சொத்துகளை சூறையாடுவது உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின.

Special Correspondent

இதையடுத்து, வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர போலீஸார் முதலில் தடியடியும், பின்னர் கண்ணீர் புகைக் குண்டு வீச்சும், துப்பாக்கிச் சூடும் நடத்தினர். பல்வேறு இடங்களில் போலீஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது.

வன்முறை பரவுவதைத் தடுக்க செல்லிடப்பேசி மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இருந்தாலும் ரயில் மறியல் போராட்டத்தால் வட மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. சாலைகள் வன்முறைக் களமாகக் காட்சியளித்தன. முன்னதாக, பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் பிரிவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர். இதேபோல பிண்ட் மாவட்டத்தில் இருவரும், மொரீனா மாவட்டத்தில் ஒருவரும் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் தலித் பிரிவைச் சேர்ந்தவர்கள், இருவர் தாக்குர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா, மீரட், மேற்கு உத்தரப் பிரதேசம், ஹாப்ர், முசாஃபர்நகர் உள்ளிட்ட இடங்களில் பெரும் வன்முறை வெடித்தது.

முசாஃபர்நகரில் வன்முறையில் இருவர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். போலீஸ் தரப்பில் மட்டும் 40 பேர் கல்வீச்சில் காயமடைந்துள்ளனர். மொத்தம் 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறை மேலும் பரவாமல் தடுக்க மத்திய படையினரும் வந்துள்ளனர். காலையில் வன்முறை மூண்டாலும், பகல் 2 மணியளவில் நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் அல்வர் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பவன் ஜாதவ் (28) என்பவர் உயிரிழந்தார். போலீஸார் உள்பட 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர பஞ்சாப், பிகார், ஹரியாணா, ஜார்க்கண்ட், சண்டீகர், தில்லி சுற்று வட்டாரப் பகுதிகளிலும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், முக்கிய சாலை சந்திப்புகளில் தலித் அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் போக்குவரத்து தடைபட்டது.

ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் வன்முறைத் தடுப்பில் சிறப்பு பயிற்சி பெற்ற 1,700 மத்திய போலீஸ் படையினரை உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தினரும், துணை ராணுவப் படையினரும் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Special Correspondent

'மக்கள் வன்முறையைக் கைவிட்டு, அமைதிகாக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும். இதற்காக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், 'உச்ச நீதிமன்றத்தின் முடிவில், மத்திய அரசின் பங்கு எதுவும் இல்லை. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கான காரணத்தையும் அரசு ஏற்கவில்லை. இது தொடர்பாக விரிவான மறு ஆய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது' என்றார். இதற்கு மத்திய அமைச்சரும், தலித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

'கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்தே தலித் மக்களுக்கு எதிரானஅடங்குமுறைகளும், வன்முறைகளும் அதிகரித்துவிட்டது' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார்.