காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், விவசாயிகள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில் ஆளும்கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

Special Correspondent

கொந்தளிப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னரை மத்திய அரசு திடீரென டெல்லி வருமாறு அழைத்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் விதித்த கெடு கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனாலும், பஜாக வின் மோடி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை ஏமாற்றி விட்டதாக தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடந்த 30ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, ஆளும் அதிமுக கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து 3ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த தவறிய மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தமிழக அரசு சார்பில் தொடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் அனைத்துக்கட்சி கூட்டத்தில், 5ம் தேதி (நாளை மறுதினம்) தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும், 15ம் தேதி பிரதமர் மோடி சென்னை வரும்போது கருப்பு கொடி போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று, வணிகர்களும் தமிழகத்தில் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், இன்று முதல் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், வருகிற 15ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டமும் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

Special Correspondent

இந்நிலையில், தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நேற்று ஒரே நாளில் 600 இடங்களில் அறிவிக்கப்படாத திடீர் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் ரயில் மறியல் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும் நேற்று போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

Special Correspondent

சென்னையில், மெரினாவில் போராட்டக்காரர்கள் புகுந்துவிடாதபடி தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சங்ககிரி, உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி உள்பட பல இடங்களில் டோல்கேட் அடித்து நொறுக்கப்பட்டன.

மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டமும் நடத்தப்பட்டு வருகின்றன.

ரயில் நிலையங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் எப்போது தமிழகம் வந்தாலும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்பினர் அறிவித்துள்ளதால், கடந்த சில நாட்களாக எந்த மத்திய அமைச்சர்களும் தமிழகம் வராமல் உள்ளனர்.

பாஜக தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெறுவதை சுட்டிக்காட்டி மத்திய உளவுத்துறையும் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். இந்த அறிக்கையையொட்டி, நேற்று முன்தினம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை கவர்னர் மாளிகைக்கு நேரில் அழைத்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலைமை குறித்தும், இதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மத்திய உள்துறை அமைச்சகம் அவசரமாக டெல்லி வருமாறு அழைத்துள்ளது. மத்திய அரசின் அழைப்பை ஏற்று, தமிழக கவர்னர் நேற்று இரவு 7.10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

அவர் இன்று டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்களை சந்தித்து தமிழக நிலவரம் குறித்து விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, மத்திய அரசுக்கு எதிராக ஆளும் கட்சி சார்பில் அனைத்து அமைச்சர்களும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள்.

இது மோடி தலைமையிலான பாஜ அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு திடீரென டெல்லிக்கு அவசரமாக அழைத்துள்ளது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவும் நேரத்தில், பிரதமர் மோடி வருகிற 15ம் தேதி ராணுவ கண்காட்சியை பார்வையிடுவதற்காக சென்னை வருகிறார். அவருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.

திமுக இதனைபிரமாண்டமாக செய்யும் பட்சத்தில் உலகத்தின் கவனத்தை காவிரி விஷயத்தில் இது ஈர்த்து விடும் என்பதால் , பிரதமர் மோடி பயணத்தை ரத்து செய்வது குறித்து மத்திய உளவுத்துறை அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பயணத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து முறையான அறிவிப்பை மத்திய அரசு இன்னமும் வெளியிடவில்லை.