தமிழக மக்களுக்கு காவிரி நீர்தான் வேண்டும் என்றால் அழுது கொண்டே இருங்கள் என்ற பாரதிய ஜனதா கட்சியின் எம்பி மீதும் சுப்ரமணியன் சுவாமியின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதேநேரம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசும் மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் வார்த்தை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் சனியன்று இரவு போராட்டம் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழக மக்களுக்கு காவிரி நீர்தான் வேண்டும் என்றால் அழுது கொண்டே இருங்கள் என்ற பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக மக்களுக்கு குடிப்பதற்கும் விவசாய தேவைகளுக்கும் நீர் வேண்டும் என்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார். காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இது சமூக ஊடக பயனாளர்களிடையே கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.