ஜெஃப்ரி என்ற ஆங்கில கவிஞர் ஒருவர், 14 ஆம் நூற்றாண்டில் எழுதிய சேவல் நரி கதைதான் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்படுவதற்கு காரணம் என்கிறார்கள்.
சேவல் நரியிடம் பொய் சொல்லி, அதனிடமிருந்து தப்பும் என்பதாக அந்த கதை இருக்கும். நேரடியாக, ஏப்ரல் 1 என்று அந்த கதையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், 'Syn March began' என்று அக்கதையில் வரும், இதனை மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து 32 வது நாள் என்பதாக புரிந்துக் கொண்டு, ஏப்ரல் 1 ஆம் தேதியைதான் அவர் குறிப்பிட்டார் என்றனர்.
வேறு சிலரோ ஃப்ரான்ஸ் நாட்டு ஓடைகள் மற்றும் ஆறுகளில் ஏப்ரல் மாதத்தில் நிறைய மீன்கள் கிடைக்கும். அதனை சுலபமாக பிடிக்க முடியும். மக்கள், அந்த மீன்களை முட்டாள் மீன்கள் என்று அழைத்தனர். பின் இந்த நாளில், அப்பகுதி மக்கள் தங்களுக்குள் ஏமாற்றி விளையாட தொடங்கினர். இதுதான் கண்டங்கள் தாண்டி பரவி முட்டாள்கள் தினம் ஆனது என்கிறார்கள்
இந்த தினத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதமர் நரேந்திர மோடி மீதும், மத்திய அரசு மீதும் முட்டாள்கள் தினமான இன்று காங்கிரஸ் நூதன முறையில் தாக்குதல் நடத்தியது.
இதற்காக டுவிட்டரில் 70 வினாடிகள் ஓடக்கூடிய ‘முக்கிய செய்திகள்’ (பிரேக்கிங் நியூஸ்) என்பதுபோன்ற ஒரு வீடியோவை வெளியிட்டது.
மோடி அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஊழலை ஒழித்துவிட்டது. நிரவ் மோடியும், மொகுல் சோக்சியும் அரசின் தூய்மை பாரத திட்டத்தின்கீழ் பஞ்சாப் நேஷனல் வங்கியை சுத்தம் செய்தனர்.
மோடி அரசு 200 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. தற்போது செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்துள்ள கிரகவாசிகள் கூட இந்தியாவில் வேலை செய்து வருகிறார்கள். ஸ்மார்ட் நகரங்களில் ரோபோட்கள் குப்பைகளை சேகரிக்கின்றன.
கங்கை தனது மாசு அனைத்திலும் இருந்து விடுபட்டுவிட்டது. அதன் தூய்மையான நீரில் நீங்கள் இப்போது பிரதமர் மோடியின் படத்தை காணமுடியும். உங்கள் வங்கி கணக்கில் அரசு ரூ.15 லட்சத்தை செலுத்தியுள்ளது. முட்டாள்கள் தின வாழ்த்துகள், என்று அந்த வீடியோ முடிகிறது.